டெல்லி: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள ஜப்பான் செல்ல இருக்கும் இந்திய  வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் சென்ற, சேலம் தங்க மாரியப்பனிடம், மீண்டும் தங்கம் பெற வாழ்த்து தெரிவித்தார்.

ஜப்பான்  தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2020ம் ஆண்டுக்கான  பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில்   கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட குழு அங்கு செல்கிறது.  இந்திய அணிக்கு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டதைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்தான் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவத்தை பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்தப் போகும் முதல் தமிழக வீரர் என்பதும் சாதனைக்குரியது.

இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் உரையாடினார்.  தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு மற்றும் அவரது பெற்றோருடன் பிரதமர் மோடி காணொலியில் பேசினார்.  தற்போது மாரியப்பன் பெங்களூருவில் பயிற்சி பெற்று வருகிறார். அவருடனும் பேசிய பிரதமர், தொடர்ந்து,  சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகிலுள்ள பெரியவடகம்பட்டி யில் வசிக்கும் மாரியப்பனின் தாயார் சரோஜா,தம்பிகள் குமார், கோபி  ஆகியோரிடமும் பேசினார்.

பிரதமருடன் பேசிய மாரியப்பன்,  தனக்கு சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் அதிலும் பயிற்சி எடுத்தேன். உயரம் தாண்டுதலில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்ட சாய் விளையாட்டு விடுதி அதிகாரிகள் எனக்கு பயிற்சி அளித்தனர். இதனால் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் பெறமுடிந்தது, அரசு அதிகாரிகளும் தனக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினார்கள், அதனால்தான் இந்தளவுக்கு முன்னேறியுள்ளார் என்றார்.

அதைக்கேட்டு என்றும்,   மாரியப்பனை பாராட்டிய மோடி, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறினார். மாரியப்பனின் தாயார் சரோஜா, பிரதமர் மோடியிடம் பேசும்போது, இந்தியா மீண்டும் தங்க பதக்கம் என் மகன் மூலம் பெறவேண்டும் என்று இறைவனை பிராத்தித்துக்கொள்கிறேன் என்றார்.

அதற்கு பிரதமர், நீங்கள் நல்ல பிள்ளையை பெற்றெடுத்துள்ளீர்கள், மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியதுடன், மாரியப்பன் என்ன விரும்பி சாப்பிடுவார்? என்று அவரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் தெரிவித்த மாரியப்பன் தாயார் சரோஜா,  தனது மகன் நாட்டுக்கோழி மற்றும் சூப் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார் என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,   “உங்கள் மகனை சந்தோஷமாக பார்த்துக்கொள்ளுங்கள்” என்று வாழ்த்தியதுடன், மாரியப்பன் சகோரர் குமாரிடம், மாரியப்பனுக்கு என்ன செய்யவேண்டும் என வினவனிர்.

அதற்கு  பதில் தெரிவித்த குமார், மாரியப்பன்  மேலும் பல பரிசுகளை இந்தியாவுக்காக  பெறவேண்டும்” என விரும்புவதாக கூறினார்.  மற்றொரு சகோதரர் கோபியிடம் வணக்கம் என்று கூறிய பிரதமர் மோடி, உங்கள் மனதில் என்ன உள்ளது என்று கேட்டார். அதற்கு கோபி, “மாரியப்பன் மீண்டும் தங்கப்பதக்கம் பெறவேண்டும்” என்றார்.  மாரியப்பன்போல் நீங்களும்  பயிற்சி எடுத்துக்கொண்டு வெற்றிபெற வேண்டும்” என்று  மோடி அறிவுரை வழங்கினார்.

மீண்டும் மாரியப்பனிடம் பேசிய பிரதமர் மோடி, “ மாரியப்பன் மீண்டும் உன்னை பாராட்டுகிறேன். உனது தம்பிகள் முன்னேற முடிந்தளவு உதவுகிறேன்” என்றார். “தேசத்திற்கு உழைத்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.

இதுபோல போட்டியில் கலந்துகொள்ளும் 54 வீரர்,வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி, அவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பிரேசில் தலைநகர் ரியோவில்  கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்து குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020 ஆகஸ்டு 24ந்தேதி தொடக்கம்! இந்தியா சார்பில்  40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட குழு பங்கேற்பு…