கோவை: கோவை மாவட்ட பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படத்தை மாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே உள்ள  பூலுவபட்டி பேரூராட்சி  அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் படம் வைக்க பாஜக பிரமுகர்கள் முயன்றனர். கடந்த வாரம், பா.ஜ.க அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் சென்ற பா.ஜ.க-வினர், பேரூராட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து  பிரதமர் நரேந்திர மோடி படத்தை மாட்டினர்.

இதுதொடர்பாக பேரூராட்சி ஊழியர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே கோரசாரமான விவாதம் நடைபெற்றது. “முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படங்களை யார் வைத்தது?, அதை வைக்க சொன்னது யார் என்று பாஜகவினர் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு அனுமதி பெற்று வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. அதுபோல நீங்களும் நீங்கள் அனுமதி வாங்கிவிட்டு வாருங்கள் ஊழியர்கள் கூறினர்.

ஆனால், பிரதமர்  மோடியின் படத்தை அகற்ற முடியாது என்று கூறிய பாஜகவினர், மீறி அகற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என மிரட்டினர். இதுதொடர்பான வீடியோ   வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து காவல்துறையினர், பா.ஜ.கவினர் மீது பூலுவப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் புகார் அளித்தார். அதனடிப்படையில் பாஸ்கரன் உள்ளிட்ட இரண்டு பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, போலீஸார் கைதுசெய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.