தருமபுரி: சென்னை ஆலந்தூரில் ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் விஜயனின் உடல் சொந்த ஊரில் காவல்துறை மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இதைக்கண்ட கிராம மக்கள் மாநில அரசையும், காவல்துறையினரின் கையாலாகாதனத்தையும் கடுமையாக விமர்சித்தனர்.

சென்னை ஆலந்தூரை அடுத்த பழவந்தாங்கல் கண்ணன் காலனியைச் சேர்ந்தவர் விஜயன் (32). இவர், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி, ஐந்து மாதக்கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. ரவுடிகள் ஒருவரை தாக்குவதாக தகல் அறிந்து அங்கு சென்றபோது, ரவுடிகள் காவலர் விஜயனை சரமாரியாக தாக்கினர். இதில் விஜயன் பலத்த காயமடைந்தார். ரவுடிகள் விஜயன் தலையில் கல்லால் தாக்கியதால்ரத்தம் கொட்டியிருக்கிறது. அதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சுயநினைவை இழந்திருக்கிறார். இதையடுத்து பொதுமக்கள் உதவியோடு காவலர் விஜயன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி விஜயன் நேற்று  உயிரிழந்துவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து புனித தோமையார் மலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லப்பா 147, 341,294(b), 323,324, 506(11) 307 ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த காவலர் விஜயன், நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் கண்ணன் காலனியைச் சேர்ந்த ரவிக்குமார் (28), விவேக் (28), வினோத் குமார் (32), அஜித் (26) ஆகிய நான்கு பேரை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும்  சிலரை போலீஸார் தேடிவருவதாக கூறப்படுகிறது. இந்த ரவுடிகள் அனைவரும் அரசியல் கட்சியினரின் பின்புலத்தில் ஆலந்தூர் பகுதியில் அடாவடி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இறந்த காவலர் விஜயனின் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த சங்கிலிவாடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விஜயனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினரும், ஊர் மக்களும் கதறி அழுதனர். மக்களை காப்பாற்றும் காவல்துறையினருக்கே இந்த நிலைமையா, மற்ற காவல்துறையினர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், தமிழ்நாடு என்ன செய்கிறது என்று அங்கு கதறி அழுத்த கிராம மக்கள் காவல்துறையிரையும், தமிழ்நாடு அரசையும் கடுமையாக விமர்சித்தனர். இதனால், விஜயனின் நண்பர்களான சில காவல்துறையினர் செய்வதறியாது திகைத்தனர்.

பின்னர், இன்று  காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க விஜயனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  கலந்து கொண்டனர். ரவுடிகளால் தாக்கப்பட்டு விஜயன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற ரவுடிகளையும், கஞ்சா விற்பனையாளர்களையும் கைது செய்யவும், கண்டிக்கவும், நடவடிக்கை எடுக்க முடியாத காவல்துறையாக, சென்னை காவல்துறை செயல்பட்டு வருகிறது, தமிழ்நாடு அரசும் செயலிழந்து விட்டது என குற்றம் சாட்டி உள்ளனர்.

புதுவீடு கட்டும் வீட்டு உரிமையாளரை மிரட்டும் திமுக கவுன்சிலர் – வைரல் வீடியோ

காவல்துறையினர் முன்னிலையிலேயே அரசு அதிகாரியை மிரட்டி தாக்க முயற்சித்த திமுக பிரமுகர்…. வைரல் வீடியோ…