சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சி வந்த நிலையில், வணிகர்களை மிரட்டும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், தற்போது கவுன்சிலர்கள் பதவி ஏற்றதும், ஏரியா வாரியாக மாமூல் வசூலிக்கும் பணிகளும் அதிகரித்து வருகிறது. இது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேலான இடங்களை தி.மு.க கூட்டணி பிடித்துள்ளது. ஆனால், தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது திமுகவினர் நடத்திய அராஜகத்தை, கூட்டணி கட்சியினரே விமர்சித்தனர். இதையடுத்து திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார்.

இந்த நிலையில், மாநிலம் முழுவதும் திமுக கவுன்சிலர்கள் பதவி ஏற்றதும் பல இடங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி போன்ற இடங்களில் உள்ள நகராட்சி அலுவலகத்தில், தங்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய தனி அறை வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதாகவும், பல இடங்களில் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளின் அறைகளை திமுகவினர் பிடுங்கிக்கொண்டு, அவர்களை வெளியே அமர வைத்துவிட்டது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் மேலிடத்துக்கு சொல்ல தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பல இடங்களில் உள்ள கவுன்சிலர்கள் அந்த பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பேக்டரிகள், புதுவீடு கட்டுபவர்கள் என பல தரப்பினரிடம் தங்களது அடியாட்கள் மூலம் மாமூல் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், சென்னையில் உள்ள திமுக கவுன்சிலர் ஒருவர், புதுவீட்டு கட்டும் வீட்டு உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டும் வீடியோ ஒன்றை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மண்டலம் 4 தண்டையார்பேட்டை 34 வார்டு கவுன்சிலர் சர்மிளா காந்தியின்  கணவர் கருணா மற்றும் திமுக நபர்கள், அந்த பகுதியில் வீடு கட்டும் வீட்டு உரிமையாளரை மிரட்டும் காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

10ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய திமுக, காய்ஞ்ச மாடு கம்புல பாய்ந்த கதையாக தனது ஆட்டத்தை தொடங்கி விட்டதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுபோல சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தில் டீக்கடை மற்றும் பிரியாணி கடையை திமுக பிரமுகர் அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதி 31வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரின் உறவினர் தினேஷ். இவரும் இவரது நண்பருமான சுகுமாரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சம்பவத்தன்று  இரவு அப்பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளில் மாமூல் கேட்டுள்ளனர். அப்போது, கடை உரிமையாளர் பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் கடையை அடித்து உடைத்து தகராறு செய்துள்ளனர்.

இது குறித்து கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளோடு சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், திமுக பிரமுகர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.