ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5 மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட 2 கம்பெனியை சேர்ந்த 180 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ந் தேதி வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. இந்த  இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி  முடிவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை, வேட்பு மனுக்கள் வாபஸ் முடிந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று  (10ந்தேதி)  வெளியிடப்பட்டது.  இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 96 வேட்பாளர்கள் 121 மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் 13 பேரின் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன . இதில்  6 பேர் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதியாக, காங்கிரஸ், அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க வேட்பாளர் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு பின் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. இந்த பணி இரவு 11 மணி வரை நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலுக்காக ஈரோடு கிழக்கு தொகுதியில்  238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர்  வரை மட்டுமே இடம்பெற முடியும். ஆனால், 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், மேலும், கூடுதல் இயந்திரங்கள் இணைக்கப்பட வேண்டியது ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும்  5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (5×16=80) பயன்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்  77 வேட்பாளர்கள் சின்னம் பொருத்தப்பட்டிருக்கம், பின்னர் இறுதியாக நோட்டா இடம்பெறும்.

5மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தினாலும் கட்டுப்பாட்டு எந்திரம் ஓட்டுச்சாவடிக்கு ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படும். ஒரே ஒரு விவபாட் இயந்திரம் மட்டுமே பயன்படும்.  இதற்கு  தேவையான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

,இதற்கிடையில், ஈரோடு: இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 2 கம்பெனி மத்திய படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 2 கம்பெனியை சேர்ந்த 180 வீரர்கள் வந்தனர். இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் மத்திய படைவீரர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடுகின்றனர்.