சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பரந்தூர் உள்பட  13 கிராம மக்கள் நடத்தி போராட்டம் இன்று  200வது நாளை எட்டி உள்ளது. இன்றைய போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பூவுலகின் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்களை காவல்துறை, அங்கே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. அதுபோல வேல்முருகனும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உட்பட 13 கிராமங்களில் இருந்து சுமார் 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.  இதனால் அந்த கிராமங்கள் முழுமையாக அங்கிருந்து அகற்றப்படுவதுடன், விவசாய நிலங்கள், நீர் நிலைகள் அழிக்கப்பட உள்ளது. இதையடுத்து, அந்த கிராம மடக்களுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. ஆனால், இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாடு  13 கிராம மக்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல், போராட்டத்தை ஒடுக்கும் வகையில், அந்த பகுதிக்கு வெளியாட்கள் செல்ல தடை விதித்து, அந்த கிராமங்களுக்கு செல்லும் பாதைகளில் தடுப்பு ஏற்படுத்தி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், பரந்தூர் விமான நிலையம் குறித்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய சர்வதேச ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

இந்த  நிலையில்,  விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் இன்று 200-வது நாளாக நீடித்து வருகிறது. இன்றைய போராட்டத்தில் 13 கிராமங்களைச் சர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டு பரந்தூர் பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க, திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல் முருகன் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,  இன்றைய போராட்ட நிகழ்வில் கலந்துகொள்ள  சென்று கொண்டிருந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் உள்பட பலரை போலீஸார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். தமிழ்நாடு அரசின் ஒடுக்கு முறையை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் கோஷமிட்டனர்.

200வது நாள் போராட்டத்தையொட்டி, அந்த பகுதிக்குள் வெளியாட்கள் புக முடியாதவாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.