சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஜூலை 8ம் தேதி முதல் காங்கிரஸ் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார். 3 கட்டமாக போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் 29 கோடி நுகர்வோர் குறிப்பாக, தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மோடி அரசு மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்போவதாக மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

இதுதொடர்பாக இன்று மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான  சத்தியமூர்த்தி பவனில் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முதல்கட்டமாக ஜூலை 8 ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம்.  பெட்ரோல் நிலையத்திற்கு முன்பு கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.

2வது கட்டமாக  ஜூலை 12ஆம் தேதி சைக்கிள் பேரணி நடைபெறும்.

3வது  கட்டமாக காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ம் தேதி தடுப்பூசிகளை காலம் தாழ்த்தி வழங்குவதை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெறும்.

நீட் தேர்வு குறித்து குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உள்ளது.. அதன் அடிப்படையில் தான் ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகார மமதையில் அதற்கு எதிராக பாஜக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அறிவு குறைவாக உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆகும் நிலை உள்ளதாக பாஜக கூறுகிறது.  சமூக நீதி கொண்ட தமிழ்நாட்டில் இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.