சென்னை: தமிழ்நாடு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக கூட்டணியில், பாஜக 20 தொகுதிகளில் போட்யிட்டது.  போட்டியிட்டவர்களில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, எம்.ஆர்.காந்தி ஆகிய 4 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.  இந்த வெற்றியின் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்துக்குள் பா.ஜனதா நுழைந்துள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பல ஆண்டுகளாக பிரதிநிதித்துவமே இல்லாத  நிலையில், கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், சட்டமன்றத்தில் தடம் பதித்தது தேசிய அளவில் தலைவர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து, வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள்   4 பேரும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில்  நேரில் சென்று பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெறவுள்ளனர்.

பிரதமர் மோடி எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு ‘மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள், அதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடியுங்கள்’ என்று அறிவுரை வழங்கினார்.
மதியம் 1 மணி அளவில் அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை 4 எம்.எல்.ஏ.க்களும் சந்திக்க உள்ளனர்.

முன்னதாக, புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் நேற்று மோடியை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.