தமிழகத்தில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கவலைக்கிடமாக குறைந்து வருவதால், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தேசிய குடும்ப சுகாதார சர்வே (NFHS-6) 2023-24 அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) 2.0 ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் அது 1.7 ஆக குறைந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் என்ற கருவுறுதல் விகிதமே மக்கள்தொகை சமநிலையை பராமரிக்கத் தேவையானது என்றும், தற்போதைய நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழகத்தின் மக்கள்தொகை குறையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வோர் விகிதம் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதே கருவுறுதல் விகிதம் குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மாநிலத்தின் கருவுறுதல் விகித சரிவை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் ரவிக்குமார் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
[youtube-feed feed=1]