திருவண்ணாமலை

கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2500 பக்தர்களுக்கு மட்டுமே திருவண்ணாமலையில் மலை ஏற அனுமதி அளிக்கப்பட உள்ளது.

உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாவைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

நாளை இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  மலை உச்சியில்  வரும் 26 ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதைக் காண வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், குடிநீர் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட முடிவு செய்துள்ளதாகவும் அனுமதிச் சீட்டு இல்லாமல் பக்தர்கள் மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.