சென்னை:
மிழ்நாட்டில் ஒமிக்ரான் XE வகை இதுவரை கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். அதன்பிறகு ஆல்பா, டெல்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகையில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பினை ஏற்படுத்தி வந்தது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் மூன்றாவது அலைக்குப் பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இந்தியாவிலும் டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமல்ல என அறிவிக்கப்பட்டன.

ஆனால் அதற்குள்ளாக கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸான XE வைரஸ் கண்டறியப்பட்டது. இது ஒமைக்ரானில் இருந்து உருமாற்றமடைந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒமைக்ரானின் முந்தைய திரிபான BA2 பிறழ்வை விட 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது எனவும், BA 2 உடன் ஒப்பிடுகையில் XE திரிபின் சமூகப் பரவல் 10% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்காக தொடர் ஆய்வுகள் தேவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா , இங்கிலாந்து , தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த எக்ஸ் இ வைரஸின் பரவல் இருந்து வந்த நிலையில் தற்போது முதன் முறையாக மும்பையில் ஒருவருக்கு இந்த தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது தான் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், மும்பையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருப்பது மக்களை பீதியடையச் செய்துள்ளது.

இந்த வைரஸ் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் XE வகை இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.