நரிக்குறவர்களுக்கு வேலை.. விமானநிலையம் தரும் வாய்ப்பு..

சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்குப் புறாக்களாலும், குருவிகளாலும் எப்போதுமே பிரச்சினை தான்.

குருவிகள் என்று இங்கே குறிப்பிடப்படுவது, தங்கம் கடத்தி வரும் மனித குருவிகள்.

புறாக்கள் என்று சொல்வது, நிஜமான புறாக்களைத் தான்.

அனுமதிச் சீட்டுகள் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும், எந்த நேரமும் உலாவுகின்றன, புறாக்கள்.

சமயங்களில், பாதுகாப்பு பிரதேசங்களிலும் ஊடுருவி, டேபிள், டேபிளாக குதித்து விளையாடும்.

இப்போது பயணிகள் விமானங்கள் இயக்கப்படாததால், விமான ஓடுபாதை மற்றும் டெர்மினல்கள் காலி மைதானமாகவே உள்ளன.

சும்மா இருக்கும் இந்த நேரத்தில்-

புறாக்களின் கொட்டத்தை ஒடுக்க முடிவு செய்த விமான நிலைய அதிகாரிகள், சுற்று வட்டார பகுதியில் இருந்து , நரிக்குறவர்களை அழைத்து வந்துள்ளனர்.

‘கவுண்’ உள்ளிட்ட ஆயுதங்களுடன் குவிந்துள்ள நரிக்குறவர்கள், உள்நாட்டு விமான முனையம், வெளிநாட்டு விமான முனையம் என அனைத்து இடங்களிலும் புகுந்து புறா வேட்டை நடத்தி வருகிறார்கள்.

‘’ஊரடங்கில் ஏதோ ஒரு வேல கெடைச்சிடுச்சி’’ என்று, நரிக்குறவர்களுக்குச் சந்தோஷம்.

‘’ வாங்கும் ஊதியத்துக்கு நரிக்குறவர்களைக் கண்காணிக்கும் வேலையாவது பார்க்கிறோமே’’ என்று விமான நிலைய ஊழியர்களுக்கும்  ஆத்ம திருப்தி.

– ஏழுமலை வெங்கடேசன்