ஸ்ரீநகர்

தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று முதல் ஜம்மு காஷ்மீரில் 45 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பான என் ஐ ஏ 15 மாவட்டங்களில் 45 இடங்களில் நேற்று முதல் சோதனை நடத்தி வருகிறது.   இது அந்த பகுதிகளில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து தேசிய புலனாவ்ய் அமைப்பு அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர்.

அப்போது அவர்கள், “ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்காக நிதியுதவி வழங்கல் தொடர்பான வழக்கில், 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக ஜமாத்-இ-இஸ்லாமியன் வளாகத்தில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசு இந்த அமைப்பை 2019ம் ஆண்டு 5 ஆண்டுகளுக்குத் தடை செய்தது.

ஆயினும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் ஜம்மு -காஷ்மீரில் தடையை மீறி நடந்து கொண்டிருந்தன. இந்த அமைப்பு பாகிஸ்தான் சார்பு மற்றும் பிரிவினைவாத செயல்களை ஆதரித்து வருகிறது. டில்லியில் இருந்து மூத்த டிஐஜி குழுவினர், ஸ்ரீநகருக்கு வந்தனர்.

அந்த குழுவினர் ஸ்ரீநகர், புட்காம், கந்தர்பால், பாரமுல்லா, குப்வாரா, பந்திபூர், அனந்த்நாக், ஷோபியன், புல்வாமா, குல்கம், ரம்பன், தோடா, கிஷ்ட்வார் மற்றும் ரஜோரி ஆகிய இடங்களில் சந்தேகத்துக்குரிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தவிர கந்தர்பாலில் உள்ள ஜமாத்தின் மாவட்டத் தலைவரின் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.