டெல்லி: நெய்வேலியில் என்.எல்.சியின் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை நிறுத்தும் திட்டம் இல்லை  என்றும், என்.எல்.சி விரிவாக்கம் தொடரும்,  விரிவாக்கம் செய்ய மேலும் 2600 ஏக்கர் தேவைப்படுவதாகவும் மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் நெய்வேலி விரிவாக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.  ”பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான லட்சிய இலக்கைக் கருத்தில் கொண்டு, நெய்வேலியில் உள்ள இரண்டாவது சுரங்கத்தை விரிவாக்கம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறுமா என”   கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்தத நிலக்கரி மற்றும் சுரங்க மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி,  நெய்வேலியில் உள்ள இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்த திரும்பப் பெறும் திட்டம் இல்லை. இரண்டாவது சுரங்கம் உள்ளிட்ட அனைத்து சுரங்கங்களும், உற்பத்தி நிலையங்களும் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து தென் மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கும் நோக்கில் செயல்படு கின்றன. எனவே, நெய்வேலியில் தற்போதுள்ள சுரங்கங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்கள் தொடர்ந்து இயங்கும்” என விளக்கமளித்துள்ளார்.

இதையடுத்து அதிமுக எம்.பி.  சி.வி. சண்முகம்,  நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இன்னும் சில சுரங்க நடவடிக்கைகளுக்காக அருகிலுள்ள பகுதிகளை கையகப்படுத்துகிறது என்பது உண்மையா? என  கேள்வி எழுப்பினார்.

இதற்கும் எழுத்துப்பூர்வமாக நிலக்கரி மற்றும் சுரங்க மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி,  ”சுரங்க விரிவாக்க பணிகளுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 1054 ஹெக்டேர் அதாவது 2604.4 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தொடர்ச்சியான மின்சார உற்பத்திக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்.

நில கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால், சுரங்க விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முழு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மாற்றப்பட்ட பலன்களை பெற்றுக்கொள்ளவும் நில உரிமையாளர்கள் ஒப்புதல் தெரிவித்து வருகின்றனர்.

விவசாய நிலத்திற்காக நாட்டிலேயே அதிக இழப்பீடு வழங்கும் நிறுவனம் என்.எல்.சி தான். சுரங்க விரிவாக்க பணிகளுக்காக யாரேனும் ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீட்டை இழந்தால், அவருக்கு ரூ.75 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது” என அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

என்எல்சி விரிவாக்கத்தால்,  முப்போகும் விளையும் நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சமிபத்தில், விவசாய நிலங்களின் வழியாக, பயிர்களை அழித்து, காவால் வெட்டும் பணியை என்எல்சி மேற்கொண்டது தமிழ்நாடு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகள் திரும்பப் பெறப்படாது, கூடுதல் நிலங்கள் கைப்பற்றப்படும் என மத்திய அரசு திட்டடமாக தெரிவித்து இருப்பது விவசாயிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.