டெல்லி: செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பாக, கூடுதல் அவகாசம் கோரிய தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை  உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழக டிஜிபி, உள்துறை செயலர் நேரில் ஆஜராக  உத்தரவிட்டனர். பின்னர் அதை நீதிபதிகள் திரும்பப்பெற்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்துத்துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தர்மராஜ், ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியோர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ததுடன், தொடக்கத்திலிருந்து விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால், வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது.

அதேபோல, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்துசெய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு  சிபிசிஐடிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை விசாரிக்க வேண்டும் , இரண்டு மாதத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்,  என்று உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி அவரை கைது செய்த நிலையில், அவர் நெஞ்சுவலி என கூறி காவேரி மருத்துவமனையில் தஞ்சமடைந்தார். பின்னர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை தற்போது அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை சார்பில், உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி தொடர்பான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு இறுதி விசாரணையை நிறைவு செய்ய கூடுதல் அவகாசம் கோரி  மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையின்போது, 6 மாத அவகாசம் எல்லாம் வழங்க முடியாது, குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும்.

உங்களுக்கு பிரச்சனை என்பது எப்போது இருந்துகொண்டே தான் இருக்கும். எனவே, உரிய காரணங்களை தெரிவித்தால் கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என சாடிய நீதிபதிகள்,

நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் வேலையை முடிப்பீர்கள், 24 வருடமானாலும் வேலையை முடிக்காமல் கூட இழுத்தடிப்பீர்கள், அரசுகள் எப்படி செயல்படும் என்பது தெரியும் என்றும் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இந்த வழக்கில், பலரிடம் வாக்குமூலங்கள் பெறுவது கடினமான பணி என்பதால் கூடுதல் அவகாசம் தேவை என மீண்டும் தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  இந்த  வழக்கில் தமிழக டிஜிபி, உள்துறை செயலர் நேரில் ஆஜராக  உத்தரவிட்டு, சம்மன் அனுப்பியது.  இந்த வழக்கில், மேலும் எவ்வளவு நாள் அவகாசம் வேண்டும் என்பதை அதிகாரிகள் நேரில் வந்து கேட்கட்டும் என கூறினர்.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30-க்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் தவறினால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் ஆஜராகும் உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.