நாச்சியார் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோயில் என்ற ஊரில் அமைந்துள்ளது.

கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர். இக்கோவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும்.

திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள். ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.

கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீவாசுதேவனாக திருமணக் கோலத்தில் ஸ்ரீ வஞ்சுளவல்லித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பெருமாளைவிட தாயார் சற்று முன்னே எழுந்தருளி இருப்பதை காணலாம்.இங்கு சகல மரியாதைகளும் முதலில் நாச்சியாருக்குத்தான். பெருமாளும் நாச்சியாரும் ஒரே சன்னதியில் எழுந்தருளி இருப்பது மற்றொரு தனிச்சிறப்பு ஆகும்.

உடன் கருவறையில் பிரம்மா, மற்றும் 4 வ்யூக மூர்த்திகளான ப்ரத்யும்னன், பலராமன் (சங்கர்ஷணன்), அநிருத்தன், புருஷோத்தமன், மேதாவி முனிவர், வஞ்சுளவல்லி தாயார் என 7 பேர். எம்பெருமான் ஐந்து ரூபங்களுடன் விளங்குகிறார் என்கிறார்கள் படித்த சான்றோர்கள் – “பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை” என ஐந்து ரூபங்களய் விளங்கும் அவனை நாம் காணமுடிவது ஐந்தாவதில் தான். பரம் எனப்படும் பரம ரூபம் ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும் அவனது திருமேனி. அது நமக்கு அகப்படாது.

பாற்கடலில் வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என்கிற திருமேனிகளோடு நிற்கிறான். அவைகளுக்கு வியூஹம் எனப் பெயர். வைஷ்ணவ சம்பிரதாயப் படி பரம்பொருள் பரவாஸுதேவன். முத்தொழில் புரிவதற்காக ப்ரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷனன் என்று மூன்று தெய்வங்களாக பரவாஸுதேவன் அவதரிக்கிறான். அந்த முத்தேவர்களில் ப்ரத்யும்னன் பிரம்மனின் அந்தர்யாமி; அநிருத்தன் விஷ்ணுவின் அந்தர்யாமி; சங்கர்ஷனன் உருத்திரனின் அந்தர்யாமி. அவைகளையும் நாம் அறிவதற்கு அரிது.

இத்தலத்தில் தாயாருக்குத்தான் முதலிடம், அபிஷேகம், நைவேத்யம் எல்லாம் முதலில் தாயாருக்குதான். அது ஏன் என்பதற்கான வரலாறு. ஆதி காலத்தில் இத்தலத்தில் மேதாவி என்ற முனிவர் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரே தனக்கு மகளாக பிறக்க வேண்டுமென்று கடும் தவம் செய்தார். தாயாரும் மனமிரங்கி ஒரு நாள் ஒரு வஞ்சுள மரத்தடியில் (நீர் நொச்சி) குழந்தையாக அவதாரம் செய்தாள். முனிவரும் அன்னையை எடுத்து உச்சி முகர்ந்து சீராட்டி வஞ்சுளவல்லி என்று திருநாமமிட்டு வளர்த்து வந்தார். தாயாரும் தக்க பருவத்தை அடைந்தார்.

பெருமானின் திருமணத்திற்கு உதவிய கருடாழ்வாருக்கும் நாச்சியார் கோவிலில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. கருவறைக்கு சற்று முன்னால் வலப்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கும் கருடாழ்வார் மிக அழகானவர். உற்சவ காலத்தில் பெருமாளுக்கு வாகனமாக செல்லும் கல் கருடன் இவர். இந்தப் புதுமை வேறெங்கும் இல்லை. இந்த கருடனை தூக்கிச்செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது, எட்டு, பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம். திரும்பும் சமயம் அதே போல் குறைந்து கொண்டு வந்து நான்கு பேர் மட்டும் சென்று கருடனை அதன் சன்னதியில் அமர்த்துவார்களாம். வியக்க வைக்கும் ஆலய அதிசயம் இதுவாகும்.

வியாழக்கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.