டெல்லி: என்.எல்.சி. – தமிழ்நாடு அரசுடன் இடையேயான சுரங்க குத்தகை ஒப்பந்தம் 2036 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக எம்.பி.யின் கேள்விக்கு மத்தியஅரசு  நாடாளுமன்றத்தில்  பதில் அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த உழவர் விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான வினாக்களை எழுப்பி தகவல்களை மத்திய அரசிடமிருந்து பெற்றேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் மீது அப்பகுதி மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். இருந்தாலும், அதன் விரிவாக்க பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. தற்போது,   வளையமாதேவி பகுதியில் ஏற்கனவே கையகப்படுத்தி  விளைநிலங்கள் வழியாக கால்வாய் அமைக்கும் பணியை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில்,  என்எல்சிக்கு எதிராக  நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் சில போலீசாரும் காயம் அடைந்தனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் எதிரொலித்து. என்எல்சி நிர்வாகம் பயிர் அறுவரை 2 மாசம் காத்திருக்க முடியாதா?  என கேள்வி எழுப்பியதுடன்,  ஜனநாயக ரீதியிலான அமைதி போராட்டம் என்பதாலேயே போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இடம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுவிட்டது. போன டிசம்பர் மாதமே பயிர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் அதை விவசாயிகள் மதிக்காமல் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. என்எல்சி விரிவாக்க பணிகள்  கடந்த மார்ச் மாதத்திற்கு உள்ளாக முடிய வேண்டிய  நிலையில், விவசாயகிளின் எதிர்ப்பு காரணமாக தாமதமாகி வருவதாகவும், பரவனாறு பணி மேற்கொள்ளவில்லை என்றால் சுரங்க பணிகள் பாதிக்கப்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக எழுத்துபூர்வமாக சில கேள்விகளை முன்வைத்திருந்தார். அதற்கு ம மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ள பதிலில்,

என்.எல்.சி 3-ஆவது சுரங்கத்திற்கான நடவடிக்கைகளை திரும்ப பெறுமாறு தமிழக அரசு எந்த கோரிக்கையும் முன் வைக்கவில்லை என தெளிவுபடுத்தி உள்ளது. மேலும்,  என்எல்சி தொடர்பாக  29.8.1963 அன்று தமிழ்நாடு அரசுடன் 25,900 ஹெக்டேர் அளவுக்கு என்.எல்.சி.ஐ.எல்  சுரங்க குத்தகை ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. அதன்பிறகு, தொடர் நடவடிக்கையாக, அவ்வப்போது குத்தகைக்கான காலம் புதுப்பிக்கப்படும் நிலையில், இறுதிணுயாக  05.12.2036 வரை மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்கான பணிகளும் ஒரு அங்கம், மூன்றாவது சுரங்கத்திற்கான பணிகளை,  நடவடிக்கைகளை திரும்ப பெறுமாறு, தமிழ்நாடு அரசிடமிருந்து இதுவரை எந்த கோரிக்கையும், விண்ணப்பமும் நிலக்கரி கட்டுப்பாட்டாளருக்கு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை என்.எல்.சிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், 2036-ஆம் ஆண்டு வரை அந்தக் குத்தகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, மூன்றாவது சுரங்கம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. உழவர்களின் நலன் காக்கும் அரசு என்று பெருமை பேசிக் கொள்ளும் தமிழக அரசு, எந்த அளவுக்கு உழவர்களுக்கு துரோகம் செய்கிறது என்பதற்கு இவையே சான்றுகள் ஆகும்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினாக்களுக்கு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்து மூலம் அளித்த விடையில் இந்த விவரங்களை கூறியுள்ளார். கடலூர் மாவட்ட உழவுக்கும், தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கும், பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். இதற்கு தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு உள்ளது. ஆனால், மக்களின் உணர்வுகளை மதிக்காத தமிழக அரசு, உழவர் நலன்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் காற்றில் பறக்கவிட்டு, என்.எல்.சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்த உழவர் விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்றத்தில் வினாக்களை எழுப்பி மேற்கண்ட தகவல்களை மத்திய அரசிடமிருந்து பெற்றேன்.