சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூலை மாதம் மட்டும்  82.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த ஜுலை மாதம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரயிலுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது.  இதனால் அடுத்தடுத்த கட்டமாக,  மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே  அதன்படி, தற்போது சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் ஆகிய இரு வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு வழித்தடங்களை மேலும் விரிவுப்படுத்தவும் இப்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆரம்ப நாட்கடிளில் நாளொன்றுக்கு சராசரியாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மாதம் ஒன்றிக்கு 75 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.  அதற்கேற்ப மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை மேற்கொண்டு வருகிறது.   பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையிலும், வருமானத்தை பெருக்கவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த ஜூலை மாதம் (2023) மட்டும் 82.53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக  தெரிவித்து உள்ளது.

கடந்த 2023 ஜனவரி மாதத்தில் 66,07,458 பேர் பயணித்துள்ள நிலையில், பிப்ரவரி மாதம் 63,69,282 பேரும், மார்ச் மாதத்தில் 69,99,341, ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பேரும், மே மாதத்தில் 72,68,007 பேரும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகள் பயணம் செய்துள்ள நிலையில், ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 4 கோடியே 95 லட்சத்து 90ஆயிரத்துக்கு 88 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.