டில்லி

சுமார் 300க்கும் அதிகமான ரயில் சேவைகள் ஜி 20 மாநாட்டையொட்டி மாற்றப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. டில்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

டில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  அதன்படி இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் உள்பட அனைத்து பாதுகாப்பு முகமைகளும் இணைந்து, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜி-20 உச்சி மாநாட்டிற்கான பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக செப்டம்பர் 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 300-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவைகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 207 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 15 ரயில்கள் சென்று சேரும் இடம் மாற்றப்பட்டுள்ளதாகவும், 6 ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதற்காக 70 ரயில்கள் கூடுதலாக சில நிறுத்தங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர 36 ரயில்களின் புறப்படும் இடம் மற்றும் சென்று சேரும் இடம் மாற்றப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் ரயில்களில் பயணம் செய்ய இருப்பவர்கள், தங்கள் ரயில்களின் நேரம் மற்றும் வழித்தடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என வடக்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.