சென்னை: சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்றுள்ளது திமுக. இதையடுத்து சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமைககோரி ஆளுநரை சந்தித்தார்,.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை 10.30 மணியளவில் சென்ற ஸ்டாலின், ஆட்சி அமைப்பதற்கு உரிய கடிதத்தையும், தமிழக அமைச்சரவை பட்டியலையும்   தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

நடைபெற்று முடிந்த  தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து  நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 125 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பேரும் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். அனைவரும் இணைந்து மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவைக்குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரி  ஸ்டாலின் இன்று காலை ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கினார். அப்போது தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், வரும் 7ஆம் தேதி புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவைக்கான நிகழ்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தினதார்.

இந்த சந்திப்பின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என். நேரு, பொருளாளர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து கூறிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி  “திமுக சட்டமன்ற குழுவின் தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்து நிறைவேற்றப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதும்,  இன்று மாலைக்குள் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதத்தை அளிப்பதாக தங்களிடம் ஆளுநரிடம் தெரிவித்தார்,” என்றார்.

வழக்கமான நடைமுறையின்படி, பெரும்பான்மை பலம் பெற்றுள்ளதற்கான கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டதும், ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை ஆளுநர் முறைப்படி விடுப்பார். அதைத்தொடர்ந்து பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சட்டப்பேரவை செயலாளர், ஆளுநரின் செயலாளர் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து செயல்படுத்துவர்.

அந்த வகையில், ஆளுநரின் கடிதம் கிடைத்தவுடனேயே தமது பதவியேற்பு விழா திட்டம் மற்றும் ஸ்டாலினுடன் சேர்ந்து அவரது அமைச்சரவையில் இடம்பெறுவோர் பற்றிய பட்டியலும் ஆளுநர் மாளிகை செயலகத்தில் வழங்கப்படும். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இருந்து அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பதவியேற்பு நிகழ்வுக்கான நடைமுறைகள் விவரிக்கப்படும்.