சென்னை:  பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.

தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஏதுவாக தமிழகஅரசின் போக்குவரத்து துறை ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், பற்றாக்குறை காரணமாக, பொதுமக்கள் தனியார் பேருந்துகளை நாட வேண்டிய சூழல் உள்ளது. இதை சாக்காக வைத்துக்கொண்டு தனியார் பேருந்துகள், பயண கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி கொள்ளையடிப்பது வாடிக்கையாக உள்ளது.

தற்போதும் பண்டிகை விடுமுறை  காரணமாக  சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதை தடுக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுப்பதாக அறிவிப்பது வாடிக்கையாகவே உள்ளது. ஆனால், பேருந்து கட்டணம் குறைந்தபாடில்லை.  அரசு அதிகாரிகள் ஒப்புக்கு சப்பானியாக சில பேருந்துகளில் ஆய்வு செய்வதும் அபராதம் விதிப்பதும் கண்துடைப்பு நாடகமாகவே நடத்தப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே எந்தவொரு தனியார் பேருந்துகளும் கட்டணங்களை குறைப்பது இல்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எப்போதும்போல் அறிவித்து உள்ளார்.