கோயம்புத்தூர்

நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி ஆவின் பால் விற்கக்கூடாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று கோயம்புத்தூரில் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம்,

”தமிழகத்தில் மட்டுமின்றி பால் சார்ந்த பொருட்களின் தேவை இந்தியா மற்றும் உலகச்சந்தைகளில் அதிகமாக உள்ளது. எனவே பால் உற்பத்தியை அதிகரிக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதன் மூலம் வருவாயை அதிகரிக்க முடியும்.

ஆவின் பால் கொள்முதல் விலையை பொறுத்தவரையில் அனைத்து பருவத்திலும் ஒரே சீரான விலையை வழங்கி வருகிறோம்.  எனவே இளைஞர்கள் கூட பால் உற்பத்தியாளர்களாக மாறுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி.யால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கேட்டு வருகிறார்கள்.

இந்தியாவில் தமிழகத்தின் ஆவின் பால் தான் விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளது. மேலும் பால் வினியோகஸ்தர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஏற்படுவது இல்லை. ஆவி பொருட்களை டீலர்களாக இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி விற்பனை செய்யக்கூடாது. இடைத்தரகர்கள் எங்கும் கிடையாது. எனவே ஆவின் நெய் கள்ள சந்தைகளுக்குப் போவதற்கு வாய்ப்பில்லை.

தனியாரிடம் பால் விற்பது விவசாயிகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்பதால். விவசாயிகள் பாலை ஆவினுக்கு கொடுப்பது நல்லது. நம்மிடம் 50 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறன் உள்ளது. விரைவில் அதை 70 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம்.”

என்று கூறி உள்ளார்.