சென்னை:
ண்ணாமலை ஒழுங்காக பேப்பர் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலைக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பொறியிடல் பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 20-ஆம் தேதி அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி, “தமிழ் வழிக் கல்வியை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிக ரத்து என்று அண்ணா பல்கலைக்கழகம் முன்னர் வெளியிட்ட அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அரசுக்கு தெரியாமல் இதெல்லாம் நடக்கிறதா? சிண்டிகேட் உறுப்பினராக இருக்கும் திமுக எம்.எல்.ஏவுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எண்ணற்ற செயல்பாடுகளைச் செய்து வரும் திமுக அரசை, தமிழ் மொழிக்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் அண்ணாமலை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசிடம் சொல்லி, சி.பி.எஸ்.சி-யில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பாஜக முதலில் வலியுறுத்தட்டும். தமிழ் மொழிக்கு மத்திய பாஜக அரசு முன்னுரிமை கொடுப்பதாக பாஜக மாநில தலைவர் சொல்கிறார். உயர்கல்வியில் இந்தியாவிலேயே 53% பேர் படித்திருக்கிறார்கள் என்றால் அது தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. 2 வருடங்களுக்கு முன்பாக அரசியலுக்கு வந்துவிட்டு இன்று அண்ணாமலை பேசுகிறார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏப்ரல் 17ல் தான் சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு காலியிடம் ஏற்பட்டு, சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ பரந்தாமன் சிண்டிகேட் உறுப்பினராக அறிவிக்கப்பட்டது 21ஆம் தேதி தான். அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கடிதம் சென்றது மே 5ஆம் தேதி தான்.

வரலாற்றையும் படியுங்கள், நடப்பு அரசியலைப் படியுங்கள். முதலில் பேப்பரை ஒழுங்காக படிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நாளிதழ்களை ஒழுங்காகப் படித்தால் இப்படி பேசமாட்டீர்கள். அண்ணாமலை நேருக்கு நேராக விவாதிக்கத் தயாரா எனக் கேட்கிறார். எந்த இடத்தில் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார், அண்ணாமலை வரட்டும். தமிழ் மொழியை வளர்த்தது யார் என வாதம் செய்யலாம்.

தமிழர்களை ஈர்ப்பதற்காக எங்கெங்கோ போய் தமிழ் பற்றிப் பேசுவது பாஜகவினரின் நாடகம் தானே ஒழிய, பாஜகவினருக்கு தமிழ் மொழியின் மீது அக்கறையே கிடையாது. அவர்கள் இந்த ஜனநாயக மாண்பையே ஒழித்துவிட்டு, ஒற்றையாட்சியைக் கொண்டு வருவதற்கான முயற்சிதான் புதிய தேசிய கல்விக்கொள்கை” எனத் தெரிவித்தார்.