சென்னை: தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அமைத்துள்ள பறக்கும்படையினர் நள்ளிரவு நேரத்திலும் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், காட்பாடி, சாத்தூர், ஆலங்கும் அதிமுக வேட்பாளர்களிடம் இருந்து  லட்சக்கணக்கான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விவரம் வெளயாகி உள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு எதிராக அதிமுக வேட்பாளர் ராமு போட்டியிடுகிறார். இதற்கிடையே, ராமு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பட்டியல் தயாரித்தும், கட்சி சின்னம் பொறித்த கவரில் பணம் வைத்து விநியோகம் செய்யவும் காட்வாடி அடுத்த மெட்டுகுடி பகுதியில் உள்ள அவரது உறவினர் உணவகத்தில் வைத்திருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 18 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரூபாய் பணம் 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டு, அதிமுக வேட்பாளர் ராமு புகைப்படம் பொறிக்கப்பட்ட கவரில் வைக்கப்பட்டிருந்ததும், காட்பாடி வாக்காளர் பட்டியலை வைத்து சரிபார்த்து கொண்டிருந்ததையும் தேர்தல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ராமு ஆதரவாளர்கள் வைத்திருந்த பணம், அதிமுக சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, ரூ.18 லட்சம் பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

 விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுகவினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில், ஆர்.கே.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார்.  அவர் சார்பில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வலியுறுத்தி,  வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற பறக்கும் படையினர், பணம் வழங்கி வந்த  அதிமுக நிர்வாகிகள் 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிணுல் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு போடுமாறு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தாக 3 அதிமுகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஓட்டு போடுமாறு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது, கையும் களவுமாக  அதிமுக கிளை செயலாளர் மாரிபாண்டி, மணிகண்டன், ராமர்  3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு  இடங்க்ளில் நடைபெற்ற அதிரடி சோதனைகளின்போது, லட்சக்கணக்கான ரூபாய், மற்றும் பரிசுப்பொருட்கள் கைப்பகற்றப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.