அரியலூர்: மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.டி. ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது என்றும் விமர்சித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம்  மேற்கொண்டு வருகிறார்.  இதற்கிடையில், ஸ்டாலின் மகள் செந்ததாமரை சபரீசனுக்கு சொந்த இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தோல்வு பயத்தில் உள்ள மத்திய பாஜக அரசின் மறைமுக மிரட்டல் என விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரியலூரில் நடைபெற்ற திமுக  தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  நான் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி வந்து இறங்கினேன். அங்கு இருந்து சாலை மார்க்கமாக ஜெயங்கொண்டத்துக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி வந்தது. என் மகள் செந்தாமரை வீட்டில் இன்று காலையில் 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்து ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு முன் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்போடு ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அதிமுக அரசை காப்பாற்றிக் கொண்டிருப்பது பாஜக அரசு, மோடி அரசு. ஏற்கெனவே அதிமுக அரசு மீது முதல்வர் வீட்டில், அமைச்சர்கள் வீட்டில், தலைமைச் செயலாளர் வீட்டில் எல்லாம் ரெய்டு நடத்தியுள்ளனர். அந்தக் கட்சியை மிரட்டி உருட்டி வைத்துள்ளனர். அதனால் தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன.
ஐடி, சிபிஐ வைத்து அனைவரையும் மிரட்டுகிறார்கள். ஒன்று மட்டும் மோடிக்குச் சொல்கிறேன். இது திமுக. மறந்துவிடாதீர்கள். நான் கருணாநிதியின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். மிசாவையே, எமர்ஜென்சியையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதைப் பற்றி கிஞ்சிற்றும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். இன்னும் தேர்தலுக்கு 3 நாட்கள் உள்ளன. ரெய்டு நடத்தினால் திமுககாரன் வீட்டில் முடங்கிப்போய் கிடப்பான் என்று நினைக்கிறார்கள். அது அதிமுகவினரிடம் நடக்கும். அவர்கள் தான் மாநில உரிமைகளை எல்லாம் விட்டு காலில் விழுந்து கிடக்கலாம். ஆனால், நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். இதற்கெல்லாம் பதில் தரக்கூடிய நாள் தான் ஏப்ரல் 6 என்பதை மறந்துவிடக் கூடாது”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.