சென்னை: தலைமைச் செயலகத்திற்குள் சங்கத் தலைவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவது மிகப் பெரிய அவமானம் எனக் கூறியுள்ள தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம், இதில் முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் இரா.பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் எஸ்.மகாலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பின், சம்பந்தப்பட்ட துறை சங்கங்களின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக அமைச்சர்களை சந்திப்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்திற்குள் தலைமைச் செயலக ஊழியர்கள் தவிர மற்றவர்கள் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சங்கத் தலைவர்கள் செயலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செயலகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டதால் விவசாய சங்கத் தலைவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மருத்துவ உதவி கோரி வந்த குடும்பத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சங்க நிர்வாகிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் செயலகத்திற்குள் செல்ல முடியாமல் வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர்.

அலுவலகப் பணிக்காக வெளியே சென்று திரும்பிய தலைமைச் செயலக ஊழியர்களுக்குக் கூட சில நேரங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய நடைமுறை ஆரோக்கியமானதல்ல; பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும்.

பொதுவாக புதிய அமைச்சர்கள் பதவி ஏற்ற பின்பு மரியாதை நிமித்தமாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை துறைச் சங்கங்களுடைய தலைவர்கள் சென்று சந்திப்பது பாரம்பரிய வழக்கம். அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க வருபவர்கள் தனிநபர்கள் அல்ல. சங்கங்களுடைய பிரதிநிதிகள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்று ஒரு மாதத்திற்கு பின்பு மரியாதை நிமித்தமாக செல்லக்கூடிய சங்கங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது.

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை. அமைச்சர்களை சந்திப்பதற்கான பார்வையாளர் நேரத்தை முன்கூட்டியே அறிவித்தால் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

எனவே, சங்கத் தலைவர்களை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிடச் செய்து, முந்தைய நடைமுறையைப் போல தலைமைச் செயலகத்திற்குள் சென்று அமைச்சர்களை சந்திக்கும் வசதியை ஏற்படுத்த முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]