சென்னை:
மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் 18.5.2018 அன்று அளித்த ஆணையின்படியும், மத்திய அரசு 1.6.2018 அன்று வெளியிட்டதன் அரசிதழிலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது உச்சநீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்தத்தான் எனக் கூறியுள்ளது. ஆகையால், அதற்கு இடையூறு விளைவிக்கும் விதம் எந்தப் பணியையும் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக்கூடாது. இந்த கருத்தை ஏற்கனவே 11.2.2022 அன்று நடந்த 15 வது ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுப்பினர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடான கர்நாடகாவின் மேகதாது அணைக்கட்டும் பிரச்சனை பற்றிய பொருள் மேலாண்மை ஆணையம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. தமிழகத்திற்கு எந்தெந்த இடத்திலிருந்து எவ்வளவு நீரைத் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக ஆணையிட்டிருக்கிறது. இதைச் செயல்படுத்துவது தான் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியப் பங்கு. மேலும், காவிரி நடுவர் மன்ற ஆணையத்தின் இறுதி தீர்ப்பின் படியும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படியும், எந்த ஒரு புதிய அணையைக் கட்டுவதற்கும் கர்நாடக அரசிற்கு அனுமதி கிடையாது. மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.