சென்னை: மாண்டல் புயல் எதிரொலி: மண்டலம் வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார். மேலும், அவசர உதவிக்கு 1913 என் உள்பட மாநகராட்சியின் உதவி எண்களை அழைக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

மாண்டஸ் புயல் தற்போது  சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இது மாமல்லபுரம் நோக்கி வந்துகொண்டிருக்கிறது.  இதனால் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்  என சென்னை வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கும். இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மதியம் முதலே பலத்த காற்றுடன் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், புயல் பாதிப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள  சென்னையின் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.  மேலும், ஒவ்வொரு குழுவுக்கும் பொக்லைன் இயந்திரம், 267 மரம் அறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. முடிந்தவரை சேதமின்றி புயலை சமாளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.