சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலை உடைக்கப்படும் நாள்தான் இந்துக்களின் எழுச்சி நாள் என நடிகர் கனல் கண்ணன் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் கொடுத்த புகாரின்பேரில்,  ஆகஸ்ட் 15ஆம் தேதி காவல்துறையினரால் கனல் கண்ணன்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றம்  முதன்மை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, யுடியூப்பிலும்,  இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை பேசி பதிவிடுவது வாடிக்கையாகி விட்டது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் ஒரு கட்சியில் பொறுப்பில் இருக்கிற நீங்கள் மாற்றுப் பகுதியில் இருப்பவர்களை ஏன் விமர்சித்து பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மீண்டும் இதுபோன்று பேச மாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார்.

எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவாதத்தை (பிரமாண பத்திரம்) தாக்கல் செய்யும் பட்சத்தில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி ஜாமீன் வழங்கி நான்கு வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மாலை இரண்டு வேலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.