சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, அரசி மூட்டைகளில் கியூஆர் கோடு முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஓராண்டில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 11,091 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொது விநியோக திட்டத்திற்கு வழங்கப்படும் அரிசிகள், ரேசன் கடை ஊழியர்கள் துணையுடன் அண்டைய மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கடத்தப்படும் ரேசன் அரிசிகள் ஆந்திரா, கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரபரப்பு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக புகார் கூறியிருந்தார்.

இதையடுத்து, ரேசன் அரிசி கடத்தலை தடுக்க தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஓராண்டில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 11,091 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அரசி கடத்தல்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறையின் கிடங்குகளில் இருந்து விநியோகத்திற்கு கொண்டுசெல்லப்படும் அரசி மூட்டைகளுக்கு கியூ ஆர் குறியீடு அடிப்படையிலான பாதுகாப்பு முறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய அதிகாரிகள்,  கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் ஒவ்வொரு ரேசன் அரிசி மூட்டையிலும் க்யூ ஆர் குறியீடு பதிக்கப்படும் என்றும், இந்த நவீன நுட்ப முறை அரிசி கடத்தல்காரர்கள் மீது வழக்கு தொடரவும் அரசுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ரேஷன் கடைகளுக்கு மட்டுமே அரிசி சென்று வருவதை உறுதிப்படுத்தும் விதமாக ஆலைகளில் இருந்தே அரசி மூட்டைகளின் விநியோகத்தை கண்காணிக்க திட்டம் தீட்டப்பட்டு இருப்பதுடன், கியூஆர் குறியீட்டை ஓட்டுவதை தவிர ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் இருப்பிடத்தை கண்காணிக்கும் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக  தெரிவித்துள்ளனர்.