மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில்

தேனுபுரீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மாடம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் தேனுபுரீஸ்வரர், தாயார் தேனுகாம்பாள். இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாகக் கபில தீர்த்தமும் உள்ளன.

தாம்பரத்திலிருந்து (கிழக்கு) சுமார் 10 கிமீ தொலைவில் மாடம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ளது. தாம்பரம்- வேளச்சேரி முக்கிய சாலையில் வடக்கு நோக்கிச் சென்று ராஜகீழ்ப்பாக்கம் அருகே மாடம்பாக்கம் முக்கிய சாலையில் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம்.

மூலவர் தேனுபுரீஸ்வரர் கருவறையில் சதுர பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில் 3 விரற்கடை அகல லிங்க வடிவில் உள்ளார். பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் தெரிகிறது. அம்மன் தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சிவகாமி அம்மையுடனும் மாணிக்க வாசகருடனும் நடராசர் காணப்படுகிறார். கஜபிருஷ்ட விமானத்துடனமைந்த கருவறை (யானையின் பின்புறம்-மாடம் போன்ற அமைப்பு) இக்கோயிலின் சிறப்பும் பெயர்க்காரணமும் ஆகும்.

கோயில் முன்மண்டபத்திலுள்ள 18 தூண்களும் அவற்றில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் குறிப்பிடத் தக்கவை. ஒரு தூணில் வடிக்கப்பட்டுள்ள சரபேசுவரருக்கு ஒவ்வொரு ஞாயிறன்றும் (மாலை 3.30-6.30) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சுவாமி சன்னிதியிலுள்ள தட்சிணாமூர்த்தி ஆலமரத்தடியில் இல்லை. துர்க்கை கையில் கிளி காணப்படுகிறது.

தல வரலாறு

கபில முனிவர் சிவபூசை செய்வதற்கு லிங்கத்தை இடது கையில் வைத்து வலது கையால் மலர்தூவி வழிபட்டதாகவும், கையில் லிங்கத்தை வைத்து வழிபட்ட முறை சரியல்ல எனக் கூறி சிவன் அவரை பசுவாகப் பிறக்கச் சாபம் அளித்ததாகவும், பசுவாகப் பிறந்த கபிலர் இத்தலத்தில் சிவனை வழிபட்டு முக்தி பெற்றதாகவும் மரபு வரலாறு உள்ளது. பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, “தேனுபுரீஸ்வரர்’ எனப்பட்டார். (தேனு-பசு). இவருக்கு “உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்’ என்றும் பெயர் உண்டு.

சுந்தர சோழரின் அமைச்சரான அன்பில் அநிருத்தர் இக்கோயிலைக் கட்டியதாகவும் பின்னர் முதலாம் குலோத்துங்கனால் இது கற்றளியாக்கப்பட்டதாகவும், முன்மண்டபமும் அதிலுள்ள தூண்களும் பல்லவர்கள் காலத்தது என்றும் விசய நகரப் பேரரசாலும் இக்கோயில் பராமரிக்கப்பட்டது என்றும் இக்கோயிலில் தற்காலத்திய கற்பலகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.

இக் கற்பலகை கோயிலின் முன்புறம் திறந்து வைக்கப்பட்டுள்ள புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் இறைவனும் இறைவியும் `சிற்றேரி ஆளுடைய நாயனார்’ என்றும் `நம்பிராட்டியார்’ என்றும் கூறப்பட்டிருக்கிறார்கள்.

அஞ்சல் முகவரி: அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் மாடம்பாக்கம் – 600073, சென்னை.