சென்னை

மிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 3  மாதங்களுக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

தமிழகத்தில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் கைனூர் கண்டிகை என்னும் சிற்றூர் உள்ளது.  இங்குள்ள மேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப் பஞ்சாயத்துத் தீர்மானம் இயற்றியது.  இந்த சிலை அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வட்டாட்சியர் சிலையை அகற்ற உத்தரவிட்டார்.  அந்த சிற்றூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகவன் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.   அரசு தரப்பில் நெடுஞ்சாலைகளில் சிலை வைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால் சிலையை அகற்றியது தவறு இல்லை என தெரிவிக்கப்பட்ட்து .  இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் அவர்,  “உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் சட்டங்களைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் ஆகும்.  தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலங்கள், பொதுச் சாலைகள், மேய்கால் புறம்போக்கு ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும்.  இனி பொது இடங்களில் சிலைகளை வைக்க அனுமதி  அளிக்கக் கூடாது.

சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அமைக்கப் பொதுமக்கள் உரிமைகளைப் பாதிக்காத வகையில் அனுமதி அளிப்பது குறித்து அரசு விரிவான விதிகளை உருவாக்க வேண்டும்    அரசு தலைவர்கள் பூங்கா உருவாக்கி பொது இடங்களில் உள்ள தலைவர் சிலைகளை அகற்றி  பூங்காவில் வைத்து பராமரிக்க வேண்டும்.  இதற்கான செலவுகளைச் சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும்.    இது குறித்து அரசு 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ” என தெரிவித்துள்ளார்.