சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கீடு செய்யாதீர்கள், அவர்களை பேசவிடுங்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில்  நடைபெற்றுவருகிறது. ஆகஸ்டு 23ந்தேதி முதல் மானிய கோரிக்கை தொடர்பான  துறை வாரியான  விவாதம் நடைபெற்றுவருகிறது.  இன்று  சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, நீங்கள் (திமுக உறுப்பினர்கள்) யாரும் கூச்சல் குழப்பம் செய்யக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். மேலும்,  சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தெளிவான பதில் கொடுக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

நேற்று   நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சருமான வேலுமணி பேசும்போது, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.  அப்போது, அமைச்சர் நேரு குறுக்கிட்டுப் பேசத் தொடங்கியதும், அவரை அமருமாறு சைகை காட்டினார் ஸ்டாலின்.

உடனே நேருவும் முடிவில், சரியான பதில் தருகிறேன் என்று கூறி அமர்ந்துவிட்டார். சிறிது நேரத்தில் மைக்கைப் பிடித்த ஸ்டாலின், ‘எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேச வேண்டாம். அவர்களை முழுமையாகப் பேசவிடுங்கள். கடைசியாக விளக்கம் சொல்லுங்கள்’ என்றார்.

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.