பாட்னா

லாலு பிரசாத் மகன் தேஜ் பிரதாப் யாதவ் குறித்து அவர் மனைவி ஐஸ்வர்யா ராய் பல அதிர்ச்சி புகார்களைத் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரசாத் யாதவ மற்றும் அம்மாநில மற்றொரு முன்னாள் முதல்வர் குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா  ராய் ஆகியோருக்கு சென்ற வருடம் மே மாதம் விமரிசையாக திருமணம் நடந்தது. இந்த திருமணம் முடிந்த ஐந்தே மாதங்களில் விவாகரத்து கோரி தேஜ் பிரதாப் யாதவ் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இருவரது குடும்பத்தினரும் இணைப்பு முயற்சியில் ஈடுபட்டனர். அம்முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கும்ப நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம்  அளித்துள்ளார். அதில் ஐஸ்வர்யா ராய், “எனக்கும் தேஜ் பிரதாப் யாதவுக்கும் திருமணம் நடந்த உடனேயே அவர் ஒரு போதை அடிமை என தெரிந்துக் கொண்டேன். அவர் போதையின் விளைவால் தம்மைச் சிவபெருமானின் அவதாரம் எனக் கூறிக் கொள்வார். அத்துடன் அவர் ராதையைப் போலவும் கிருஷ்ணரைப் போலவும் உடை அணிவார். அது மட்டுமின்றி ஒரு முறை போதை மருந்தை உட்கொண்ட பிறகு அவர் ஒரு பாவாடை மற்றும் ரவிக்கை அணிந்து விக் வைத்துக் கொண்டு தம்மை ராதை எனக் கூறிக் கொண்டார்.

இது குறித்து நான் என் புகுந்த வீட்டாரிடம் பலமுறை கூறி உள்ளேன். ஆனால் அவர்களால் எனக்கு உதவ முடியவில்லை. முக்கியமாக நான் இதை எனது மாமியார்  மற்றும் நாத்தனாரிடம் கூறினேன். அவர்கள் இனி தேஜ் அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக ஆறுதல் கூறினார்கள். ஆனால் தேஜ் அவர்கள் பேச்சுக்குக் கட்டுப்படவில்லை. நான் அவரிடம் நேரடியாகவே இந்த பழக்கங்களை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டேன்.

அவர் சிவ பெருமானின் பிரசாதம் கஞ்சா எனவும் அதை விட முடியாது எனௌவ்ம் கூறி விட்டு ராதையே கண்ணன் மற்றும் கண்ணனே ராதை என தத்துவம் பேசத் தொடங்கி விட்டார். அது மட்டுமின்றி அவர் எனது கல்வித் தகுதி  குறித்தும் தரக்குறைவாகப் பேசுவார். நான் எத்தனை படித்திருந்தாலும் எனது பனி சமைப்பதும் குடும்பத்தை கவனிப்பதும் தான் என என்னை மட்டம் தட்டுவார். எனது புகுந்த வீட்டினருக்கும் என்னைக் குறித்து அதே எண்ணம் இருந்ததால் நான் மனதளவில், உடலளவில் மற்றும் உணர்ச்சி பூர்வமாகக் கொடுமைப் படுத்தப்பட்டுள்ளேன். எனக்கு இதிலிருந்து மீட்பு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.