திருமண வரம் அருளும் குன்றத்தூர் முருகன்
தென் தணிகை என்றால் பலருக்கும் தெரியாது. குன்றத்தூர் என்றால் உடனே புரிந்துவிடும். குன்று இருக்கும் ஊர் என்பதால் அதற்குக் குன்றத்தூர் என்று பெயர் உண்டானது என்கிறார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமல்லவா… அதற்கு ஏற்ப இங்குள்ள குன்றிலும் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கிறார். அந்தக் கோயிலுக்குதான் தென் தணிகை என்று பெயர்.
அசுர சக்திகள் என்பவை மனிதர்களின் ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்று மலங்களைக் குறிப்பவை மும்மலங்களையும் சம்ஹாரம் செய்த குமரக்கடவுளை வழிபட்டால், அவற்றிலிருந்து விடுபட்டு, பிறவாப் பேரின்ப நிலையை அடையலாம் என்பது தத்துவம்.
குன்றத்தூர் சுப்பிரமணியர் குன்றத்தூர் சுப்பிரமணியர் ஆணவ மலமாகிய சூரபத்மனை திருச்செந்தூரில் நீரின் மார்க்கமாகவும், கண்ம மலமாகிய சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்தில் நிலத்தின் மார்க்கமாகவும், தாருகாசுரனை திருப்போரூரில் ஆகாய மார்க்கமாகவும் சம்ஹாரம் செய்தாராம் முருகன். திருப்போரூரில் தாருகாசுரனை சம்ஹாரம் செய்த குமரக்கடவுள், திருத்தணிகை செல்லும் வழியில் குன்றத்தூரில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவர் வழிபட்ட இறைவன், ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் குன்றத்தூரின் மலையடிவாரத்தில் தனிக்கோயில் கொண்டு அருள்கிறார்.
பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் அவதரித்தது இந்தத் தலத்தில்தான். அவரது விருப்பப்படி இரண்டாம் குலோத்துங்கச் சோழன் இந்தக் கோயிலை எழுப்பியதாகச் சொல்கிறார்கள்.
சேக்கிழார் பெருமான் தினமும் குன்றத்தூர் குமரனை வழிபடுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். அதை நினைவுகூரும் வகையில், மலையடிவாரத்தில் சேக்கிழாருக்குத் தனிச் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சேக்கிழார் குருபூஜையின்போது, முருகப் பெருமான் மலையிலிருந்து சேக்கிழார் சந்நிதிக்கு எழுந்தருளி, அவருக்கு தரிசனம் கொடுப்பது மரபாக இருக்கிறது. முருகனின் ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை, தை மாதக் கிருத்திகை, கந்தசஷ்டி விழா, மற்றும் பல விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
குன்றத்தூர் முருகன் 84 படிகள் கொண்ட மலைக் கோயிலின் சிறப்புகள் ஏராளம்.
இங்குள்ள விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், பைரவர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை, வில்வ மரத்தடி விநாயகர் ஆகியோரின் சன்னிதிகள் பழைமையும் பெருமையும் வாய்ந்தவை.
இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிடைக்கும். இங்கு வந்து தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். மேலும் சொந்த வீடு வேண்டும் பக்தர்களுக்கு விரைவில் அந்தக் கனவு பலிக்கிறது என்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பு
கருவறையின் அற்புதமும் அதன் கோபுர அமைப்பும். மேலும் இங்குள்ள வில்வ விநாயகரும் மாறுபட்ட அற்புத தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்