சென்னை: கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் 6 நாள் சுற்றுலா சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், தனது விடுமுறை பயணத்தை ரத்து செய்துவிட்டு முன்கூட்டியே சென்னை திரும்புகிறார். அதிகரித்து வரும் வாகன நெரிசல்,  காட்டுத்தீ மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அவரது கொடைக்கானல் ஓய்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நடப்பாண்டு கொளுத்தும் வெயில் காரணமாக கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுகிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு குளுகுளு சூழல் நிலவவில்லை. குறிப்பாக நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னூர் பகுதிகளில் வெயில் வாட்டி வருவதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானலை முற்றுகையிட்டுள்ளது. இதனால், அங்கு கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளதுடன்,  அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கடுமையான இடைஞ்சல்களை ஏற்படுத்தி உள்ளது. மேலும், உயர்நீதிமன்றமும்,  கோட வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இ-பாஸ் முறையை கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த சலசலப்புக்கு மத்தியில், முதலமைச்சர் ஸ்டாலின் கொடைகானலுக்கு ஓய்வெடுக்க சென்றார். இதனால் அங்கு மேலும் கெடுபிடிகளை காவல்துறையினர் அரங்கேற்றினர். மேலும் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் பேரிஜம் மலைப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். அங்குள்ள ஏரியில் படகுசவாரி செல்ல சுற்றுலா பயணிகள் விரும்பிய நிலையில், அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 6நாள் ஓய்வுக்காக ஏப்ரல் 29ந்தேதி கொடைக்கானல் சென்ற  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி வரை இங்கு தங்குவார் என தெரிவிக் கப்பட்ட நிலையில்,  முன்கூட்டியே தனது  கோடை விடுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று  சென்னை புறப்பட உள்ளார்.

இதற்காக கொடைக்கானல் ஓட்டலில் இருந்து கார் மூலம் பிற்பகலில் மதுரைக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்ல உள்ளார். இதனை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக,  கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் பாம்பார்புரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். தனது ஓட்டலிலேயே நடைபயிற்சி மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பசுமை பள்ளத்தாக்கில் உள்ள கோல்ப் மைதானத்திற்கு சென்று கோல்ப் விளையாடினார். அதன்பின் விடுதிக்கு திரும்பியபோது ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின் ஏதேனும் குறைகள் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து பல்வேறு இடங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்பத்தினர் செல்ல முயன்றனர்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் ,    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.  சுற்றுலா பயணிகள்  தொடர் வருகையால், கடுமையான வாகன நெரிசல்ஏற்படடது.  இதனால் பாதுகாப்பு கருதி, முதலமைச்சர் ஸ்டாலின் படகுசவாரி  பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா தலங்களுக்கு செல்வதிலும் தடங்கல் ஏற்பட்டது.   பின்னர், மாலையில் துர்கா ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தார். அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் துர்கா ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கொடைக்கானலில்  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால், சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக வாகனங்கள் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட கிராமங்களுக்கும், பேரிஜம் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மோயர்பாயிண்ட், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ஏரி உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்ததுடன் படகு சவாரி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

மக்கள் கூட்டம், பாதுகாப்பு காரணங்களால், முதலமைச்சர் ஸ்டாலின் தனது கோடைகால விடுமுறையை ரத்து செய்துவிட்டு இன்றே சென்னை திரும்புகிறார்.