சென்னை:
கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம் வணிகர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில், வணிகர்கள் துணை முதல்வரிடம் மனு அளித்தனர்.

சென்னையில் கொரோனா பரவலுக்கு காரணமாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்ந்தால், கடந்த மே மாதம் 5ந்தேதி கோயம்பேடு மார்க்கெட் அதிரடியாக மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து, பூந்தமல்லி அருகே திருமழிசையில், வியாபாரிகளுக்கு தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.
ஆனால், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, திருமழிசை மார்க்கெட் பகுதி முழுவதும் நீர் நிரம்பி குட்டையாக மாறியது. இதனால் லட்சக்கணக்கான டன் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கி அழுகி வீணானது. வியாபாரிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து, மீண்டும் கோயம்பேடு சந்தையை திறந்து வியாபாரத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வணிகர்கள் சார்பில் இன்று துணைமுதல்வர் பன்னீர் செல்வத்திடம் மனு வழங்கப்பட்டுள்ளது.