குவாலியர்

மலாக்கத்துறை பாஜகவின் முதல் நட்சத்திர பேச்சாளராக உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 

நேற்று குவாலியரில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்  அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு உரையாற்றினார்.

கார்கே தனது உரையில்

“ஒரு தொகுதியில் காங்கிரசுக்கெல்லாம் ஒரு வேட்பாளர்தான் இருக்கிறார். பாஜகவுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 4 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் கண்ணுக்குத் தெரிந்த வேட்பாளர் ஒருவரும் கண்ணுக்குத் தெரியாத மேலும் 3 வேட்பாளர்கள் உள்ளனர்.

இதில் முதல் நபரான அமலாக்கத்துறை, பிரதமர் மோடியைப் போல் பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக பிரசாரம் செய்து வருகிறது. இரண்டாவது நபரான சி.பி.ஐ., எதிரணி வேட்பாளர்களை பலவீனப்படுத்த முயன்று வருகிறது. மூன்றாவது வேட்பாளர், வருமானவரித்துறை ஆகும்.

இவர்களைத் தவிர, பிரதமர் மோடி, முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்ட 5 பேரும் பஞ்ச பாண்டவர்கள் போல் உள்ளனர். இவர்கள் நம்மைத் தோற்கடிக்க முயல்கின்றனர். நாம் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்.

சத்தீஷ்கர் மாநிலத்தில் தேர்தல் நடந்து வரும் நிலையில், அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களையும், முதல்வரையும் அமலாக்கத்துறை அச்சுறுத்தி வருவது ஜனநாயகம் இல்லை. .மேலும் சமமான போட்டியும் இல்லை.  காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்தது என்று பாஜக  கேட்கிறது. நாட்டையும், அரசியல் சட்டத்தையும் காங்கிரஸ் பாதுகாத்ததால்தான், அவர்களால் முதல்வர் ஆக முடிந்தது.

முன்பு பாஜக தலைவர்கள், சுதந்திரத்துக்காகப் போராடாமல், ஆங்கிலேயர்கள் பக்கம் நின்றனர். அப்போது காங்கிரஸ் போராடாவிட்டால், நாட்டின் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும்.  நாட்டுக்காக இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் உயிர் நீத்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால்ஒவ்வொரு சாதியினரின் எண்ணிக்கையை அறியச் சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்தப்படும்”

என்று குறிப்பிட்டுள்ளார்.