மும்பை

நேற்றைய உலகக் கோப்பை 39 ஆம் லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்ட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். 

நேற்று மும்பை வான்கடே விளையாட்டரங்கத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் 39-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. ஆஸ்திரேலியா தோல்வி அடையலாம் என அனைவரும் எதிர்பார்த்த போதிலும் மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்தால் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

அவர் போட்டியில் சதத்தை எட்டிய போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் மைதானத்தில் வலியால் உருண்டு புரண்டார். சில நிமிடங்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனவே அவரை ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ வகையில் வெளியேற்றிவிட்டு அடுத்த வீரரான ஆடம் ஜம்பாவை இறக்கவும் ஆஸ்திரேலிய அணிநிர்வாகம் யோசித்தது.

நம்பிக்கை இழக்காத மேக்ஸ்வெல் தன்னால் தொடர்ந்து விளையாட முடியும்  என்று கூறினார். சுமார் 35 வயதான மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவை வெற்றி அடைய செய்ய வலியை ஓரங்கட்டிவிட்டு முழுமூச்சுடன் மட்டையைச் சுழற்றிய இறுதியில் இரட்டை சதம் மற்றும் அணியின் வெற்றி என்று இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார்.

நேற்று மேக்ஸ்வெல் படைத்த சாதனைகளில் சில வருமாறு :

* இதற்கு முன்பு பாகிஸ்தானின் பஹர் ஜமான், 2021-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 193 ரன்கள் எடுத்ததே சேசிங்கில் ஒரு வீரரின் அதிகபட்சமாக இருந்த நிலையில் இது மற்றொரு இரட்டை சதம் ஆகும்.

* உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல், மார்ட்டின் கப்தில் ஆகியோருக்கு பிறகு இரட்டை சதம் அடித்த 3-வது வீரர் மேக்ஸ்வெல் ஆவார்.

*  52 ஆண்டுக்கால ஒரு நாள் போட்டி வரலாற்றில் இதுவரை 11 இரட்டை சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் மேக்ஸ்வெல் தவிர மற்ற அனைவரும் தொடக்க வீரராக இறங்கி இரட்டை சதம் அடித்தவர்கள் ஆவர். மேக்ஸ்வெல் மட்டுமே 6-வது வரிசையில் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.