எர்ணாகுளம்

கேரள மாநில காவல்துறையினர் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகனை கைது செய்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகவும் வெற்றிகரமான ஒரு திரைப்படமாகும். இதில் தென் இந்திய மற்றும் வட இந்திய திரைநட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.   குறிப்பாக இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த விநாயகனுக்கு மிகவும் பாராட்டு கிடைத்தது.

இந்த ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் விநாயகன், கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் மதுபோதையில் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் வசித்து வரும் அடுக்குமாடிக் குடியிருப்பில் பிரச்சினை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் காவல் நிலையம் வந்தபோது காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது விநாயகன் மது போதையில் இருந்ததை காவல் துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த தகவல் கேரள திரையுலகத்தினரை மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தினரையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது