திருவனந்தபுரம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நாளை முதல் 3 நாட்கள் கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன்தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வரும் 21ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கேரள மாநிலத்தில் பொதுமக்களின் வசதிக்காக தற்போதுள்ள கொரோனா தளர்வுகளில் 3 நாட்கள் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கேரளாவில் கொரோனா தொற்று மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக, வார நாட்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,   நேற்று, கொரோனா ஊரடங்கு மற்றும் தளர்வுகள் குறித்து ஆலோசனை கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இதில் வியாபாரி சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.  அப்போது,  அனைத்து நாட்களிலும் கடைகளை திறப்பது தொடர்பாக  விவாதிக்கப்பட்டது.

அதையடுத்து, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நாளை முதல் 3 நாட்கள் கூடுதல் தளர்வுகள் அனுமதித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி,   இந்த நாட்களில் கொரோனா தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் குறைவான பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களான பலசரக்கு, பழம், காய்கறி, மீன், இறைச்சி, பேக்கரி கடைகளுடன் துணிக்கடைகள், செருப்பு, நகை கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகளும் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.