திருவனந்தபுரம்:

கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு ரயில் செல்லும் தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்க கேரளா ஏற்பாடு செய்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கேரளாவில் சிக்கி தவித்த சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊரான பீகார், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு ரயில் மூலம் செல்ல உள்ளனர்.

இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து அவர்கள் ரயில் நிலையத்திற்கு பஸ் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்த பஸ்களில் பயணிக்கும் அவர்கள் சமூக இடைவெளியை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பஸ்களில் ஏற காத்திருக்கும் நேரத்திலும் தரையில் வரையப்பட்ட வட்டங்களில் வரிசையில் நிற்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

சொந்த ஊருக்கு செல்லும் இவர்கள் அனைவரின் கையில் ஒரு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் கேரளாவில் தங்கியிருந்த முகாம்களில் கொரோனா பரிசோதனை செய்துகொரொனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில், இவர்களுக்கு மற்றொரு சுற்று சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு மூன்று முகமூடிகள், சோப்புகள் வழங்ப்பட்டுள்ளது. மேலும் ரயில் செல்லும் அவர்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ரயில்வே கேட்டரிங் மூலம் உணவு வழங்கப்படும். ரயில் இவர்கள் பயணம் செய்யும் போது கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பது கண்கானிக்க, 20 பணியாளர்கள் இவர்களுடன் பயணம் செய்கின்றனர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய மூத்த போலீஸ் அதிகாரி பால்ராம் குமார், ரயிலில் செல்லும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ரயில் நிலையம் முழுவதும் 15 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் இங்கு குழுவாக அழைத்து வரப்படுகின்றனர். இவர்களுக்கு உதவ, வருவாய், சுகாதாரம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் கொண்ட குழுக்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றார்.

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களில் முழு பயண காலத்திற்கும் பேக் செய்யப்பட்ட உணவுகளோ அல்லது ஐ.ஆர்.சி.டி.சி மூலமாகவோ உணவை வழங்க கேரளா அரசு ஏற்பாடு செய்துள்ளது. இருந்தாலும், ரயில் டிக்கெட்டுகளுக்கான செலவை இந்த் தொழிலாளர்கள் ஏற்க வேண்டும் என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது. இது பல தொழிலாளர்களை சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து புலம்பெயர்ந்த தொழிலாளியான ராஜு குமார் மண்டல் கூறுகையில், டிக்கெட் வாங்க என்னிடம் பணம் இல்லை. பணம் அனுப்புமாறு தனது பெற்றோரிடம் கேட்டதாக கூறினார். மற்றொரு புலம்பெயர்ந்த தொழிலாளி தனது மனைவியிடம் கொஞ்சம் பணம் அனுப்பும்படி கேட்டுள்ளதாக வருத்ததுடன் கூறியுள்ளார்.