பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 7 மணிக்கு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக சித்தராமைய்யா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. மே 20 ம் தேதி முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருடன் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆலோசனையில் சித்தராமைய்யா மீண்டும் முதல்வராக தேர்தெடுக்கப்படுவார் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமைய்யா இருவருக்கும் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி நிலவியதை அடுத்து டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டி.கே. சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தவிர, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமைய்யா முதல்வராகவும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வராகவும் பதவி வகிப்பார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பின் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், சித்தராமைய்யா இல்லத்தின் முன்பு முதல்வருக்கான அங்கீகாரத்துடன் ஏராளமான போலீசார் இன்று காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.