டில்லி

காங்கிரஸ் முத்த தலைவர் கபில் சிபல் பாஜக தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து அமலாக்கத்துறையினர் பல அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.   இந்த நடவடிக்கைகள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது மட்டுமே எடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.  இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்,

“நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பா.ஜனதா தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் குறித்து அமலாக்கத்துறைக்குத் தெரிய வந்தாலும், மத்திய ஏஜென்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கிறது. பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் எதிர்க்கட்சி அரசுகளை அகற்ற வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள் பா.ஜனதா கட்சியின் மனதில் உள்ளது.

அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்துப் பல முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன, இதற்கு முன்பும் நான் தேர்தலில் போட்டியிட்ட பல பெயர்களைக் கூறியுள்ளேன், மேலும் அவர்கள் மீது எந்த வழக்குகள் உள்ளன என்பதையும் கூறியுள்ளேன். பா.ஜனதா தலைவர்கள் தொடர்பான கிரிமினல் வழக்குகள் உள்ளன, இது போன்ற பல மாநிலங்களில் அமலாக்கத்துறைக்கு இந்த தகவல் தெரியும், பிறகு ஏன் அமலாக்கத்துறை அங்கு நடவடிக்கை  எடுக்கவில்லை..?

மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதைக் கூட பா.ஜனதா விரும்பவில்லை. அவர்களுக்கு (பா.ஜனதா) ஒரு குறிக்கோள் உள்ளது, அது எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து அவர்களை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான், அவர்களால் (எதிர்க்கட்சிகள்) மக்களவை தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாது, அவர்கள் பிரச்சாரம் செய்யாவிட்டால் அது நிச்சயமாகப் பக்க விளைவுகள் ஏற்படும்” 

என்று கூறி உள்ளார்.