டில்லி

பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் ஓட்டல் குளியலறையில் உயிரிழந்தார்.  ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரை சேர்ந்த தீப்தி ஆர்.பின்னிதி என்ற பெண், ‘யூ டியூப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விவாதங்களில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தார்.

அவர் இரண்டு அரசுகளும் ஸ்ரீதேவி மரண மர்மங்களை மூடி மறைப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் தாம் சொந்தமாக விசாரணை நடத்தி, இதைக் கண்டுபிடித்ததாகக் கூறி பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் எழுதியதாக சில கடிதங்களையும், உச்சநீதிமன்ற ஆவணங்கள், ஐக்கிய அரபு அமீரக ஆவணங்கள் என்ற பெயரில் சில ஆவணங்களையும் வெளியிட்டார்.

இது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு மும்பை வழக்குரைஞர் சாந்தினி ஷா என்பவர் புகார் அனுப்பினார். அந்த புகாரைப் பிரதமர் அலுவலகம், அதை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி வைத்தது.  கடந்த ஆண்டு, தீப்தி ஆர்.பின்னிதி, அவருடைய வழக்குரைஞர் பாரத் சுரேஷ் காமத் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து தீப்தி ஆர்.பின்னிதி வீட்டில் சோதனை நடத்தியது. அப்போது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.

தீப்தி ஆர்.பின்னிதி, வழக்குரைஞர் காமத் ஆகியோருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் கடிதங்கள் உள்பட தீப்தி தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று விசாரணையில் தெரிய வந்ததாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

ஆனால் தீப்தி, ”குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது நீதிமன்றத்தில் ஆதாரங்களை அளிப்பேன்” என்று கூறி உள்ளார்.