துரை

திடீரென மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கனிமொழி சந்தித்துள்ளனர்

கடந்த 20 ஆம் தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநாடு வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று காலை கோவிலுக்கு வந்தார்.

கோவில் நிர்வாகம் அவருக்கு வரவேற்பு அளித்தது. பிறகு அவர் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சன்னதிகளில் சாமி கும்பிட்டார். எடப்பாடியுடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.

தற்போது நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இதில் நேற்று 2-வது நாளாக ஆய்வை தொடர்ந்த அவர்கள், சாத்தமங்கலம் மாநகராட்சி பள்ளியில் முதல்வரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதைப் பார்வையிட்டனர்.  பிறகு கனிமொழி தலைமையிலான நிலைக்குழு உறுப்பினர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திடீரென வந்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில் பட்டர்கள் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.  கனிமொழி உள்ளிட்டோர் சுவாமி சன்னதி 2 ஆம் பிரகாரம் வழியாக வந்தபோது எதிரே எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அந்த வழியாக வந்தனர்.  அப்போது கனிமொழியும், எடப்பாடி பழனிசாமியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு பரஸ்பரமாக வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜுவிடம் நன்றாக இருக்கிறீர்களா? என்று கனிமொழி கேட்டார். அவர்களும் பதில் தெரிவித்துவிட்டுச் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றனர். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.