பெங்களூரு: தமிழ்நாட்டில் காற்று மாசு அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், வரும் 2030-ம் ஆண்டில் சென்னையில் காற்று மாசு 27 சதவீதம் அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடியைவிட சென்னையில்  இருமடங்கு அதிகமாக காற்று மாசு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) இந்தியாவின் முன்னணி சிந்தனைக் குழுவில் ஒன்றாகும், இது ஒரு நிலையான, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்திற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமையான அணுகுமுறைகளுடன் கொள்கை வகுப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் செய்ல்பட்டு வருகிறது. மேலும், காற்று மாசு தொடர்பான ஆய்வுகளை நடத்தி, அறிக்கை வெளியிடுகிறது.

இந்த மையம் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டில்  தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்திய ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெளியேற்றப்படும் மாசு தொடர்பான ஆய்வை மேற்கொண்ட நிலையில், அதன் முடிவுகள் வெளியாகி உள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் அதிக மாசு உள்ள மாவட்டமாக தூத்துக்கு இருப்பதாக தெரிவித்து உள்ளது., தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் இருப்பதால் மாசு அதிகமாக இருப்பதாக தெரிவித்து உள்ளது. தலைநகர் சென்னையிலும், அதனை சுற்றி ஏராளமான மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள்  பெருகி வரும் நிலையில், சென்னையிலம் காற்று மாசு அதிகரித்து வருவதாக தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு, காற்று  மாசுவை குறைக்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியுள்ள நிலையில், அதை தவிர்க்கும் பட்சத்தில், 2030-ம் ஆண்டு சென்னை, திருச்சியில் அதிகபட்சமாக 27 சதவீதமும், மதுரையில் 20 சதவீதமும், தூத்துக்குடியில் 16 சதவீதமும் மாசு அதிகரிக்கும் என ககணித்துள்ளது.

தமிழ்நாடு அரசு முன்னுரிமை அடிப்படையில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும்  2030ம் ஆண்டு, காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளதுடன், இதன் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

இதே நிலை நீடித்தால் 2030ம் ஆண்டு, தமிழ்நாட்டில், மாசு  வெளியேற்றத்தின் அளவானது கடுமையாக அதிகரிக்கும் என்றும்,  அதை கட்டுப்படுத்தினால், திருச்சியில் 36 சதவீதமும், மதுரை, சென்னையில் 27 சதவீதமும், தூத்துக்குடியில் 20 சதவீதமும் குறைக்க முடியும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது

. இதுகுறித்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் பிரதிமாசிங் கூறும்போது, ‘எரிபொருள் பயன்பாட்டை நிலக்கரியில் இருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது, தரமான சாலை உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்தில் வெளியாகும் மாசுவை குறைக்க கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் காற்று மாசுவை குறைக்கலாம்’ என்றார்.

மாசுவை குறைக்க கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தி அதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதன்மூலம் காற்று மாசு அதிகரிப்பதை குறைக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.