டெல்லி: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டு தலைவர் கண்ணையா குமார். குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகிய இரு இளைஞர்களும், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் யூனியன் தலைவருமாக இருந்தவர் கண்ணையா குமார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கு எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.  குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏவுமான ஜிக்னேஷ் மேவானி ஆகிய இரு இளம் தலைவர்வரும் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அது உறுதியாகி உள்ளது.

இளந்தலைவர்களான கண்ணையா, ஜிக்னேஷ் மேவானி ஆகியோர், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில், தங்களை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக்கொண்டனர்.

டெல்லி  ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் யூனியன் தலைவராக இருந்த கண்ணையா குமார் , கடந்த 2016ம் ஆண்டு டெல்லி பாராளுமன்ற கட்டிட குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதி அஃசல் குருவின் நினைவு நாளன்று தேச விரோத கோஷங்களை எழுப்பியதால் சிறை தண்டனை பெற்றவர். 2019 நாடாளும ன்ற தேர்தலுக்கு முன்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முறைப்படி சேர்ந்த கண்ணையா குமார், பீகாரில் தனது சொந்த தொகுதியான பெகுசாராயில், பாஜக வேட்பாளர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் கண்ணையா குமார் பீகாரின் காங்கிரஸை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி 2017 ல் குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்கம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸின் ஆதரவுடன் வெற்றி பெற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது “செப்டம்பர் 28 ஆம் தேதி, நான் இந்திய தேசிய காங்கிரசில் கன்ஹையா குமாருடன் சேரப் போகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இளம் தலைவர்கள் இருவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியினருக்க புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி போன்ற இளம் தலைவர்கள் வெளியேறியிருக்கும் நிலையில், ஜிக்னேஷ் மற்றும் கண்ணையா குமார் ஆகிய இருவரின் வருகையும் காங்கிரஸ் கட்சிக்கு புதுத்தெம்பை அளிப்பதாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஜிக்னேஷ் மேவானி, கண்ணையா குமார் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான   ஏற்பாடுகளை அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.