சென்னை:

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21நாட்கள் ஊரடங்கு வரும் 14ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து, அனைத்து வகையான போக்குவரத்துக்களும் இயங்க வாய்ப்பு உள்ளதால்,  வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ரயில், விமான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு ஒருசில மணி நேரங்களிலேயே முடிவடைந்து உள்ளது.

இந்தியாவில் தற்போதுதான் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,  ரயில், விமான முன்பதிவு தொடங்கி உள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும், முன்பதிவுகளும் முடிவடைந்து உள்ளன.

பயணச்சீட்டு முன்பதிவு குறித்து தெற்க ரயில்வே விளக்கம் தெரிவித்துள்ளது.

அதில், ஏப்ரல் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையுள்ள காலத்துக்கு அனைத்துப் பயணியர் ரயில்கள், விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்தக் காலக்கட்டத்துக்குரிய முன்பதிவு மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.

120 நாட்கள் என்கிற காலவரம்புக்கு உட்பட்டு ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குப் பிந்தைய நாட்களுக்கு ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

ரயில்வே பயணச்சீட்டு கவுன்டர்கள், முன்பதிவு கவுன்டர்கள் ஏப்ரல் 14ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.

ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிந்தைய காலத்துக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட இல்லை என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.