புதுடெல்லி: அடுத்த 2021ம் ஆண்டில் நடத்தப்படக்கூடிய ஜேஇஇ மெயின் தேர்வு, ஆண்டில் 4 முறை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால்.

அடுத்தாண்டின் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அத்தேர்வு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கேள்வித்தாளில் மொத்தம் 90 கேள்விகள் இடம்பெறும். அவற்றில், 75 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். தேர்வானது மொத்தம் 13 மொழிகளில் நடத்தப்படும்.

இந்தி, ஆங்கிலம், பெங்காலி, அஸ்ஸாமி, மராத்தி, தமிழ், ஒடியா, தெலுங்கு, கன்னடம், உருது, மலையாளம், பஞ்சாபி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளே அவை.

ஜேஇஇ மெயின் தேர்வின் முதற்கட்டம் அடுத்தாண்டு பிப்ரவரி 23-26ம் தேதிகளில் நடத்தப்படும். அதற்கடுத்த 3 தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வுகள் கணினி அடிப்படையில் நடத்தப்படும். அதேசமயம், பி.ஆர்க் பாடத்திற்கான தேர்வு மட்டும் ஆஃப்லைன் முறையில் நடத்தப்படும். மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்” என்றார் அமைச்சர்.